business

img

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை... நிர்மலா சீதாராமன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்....

புதுதில்லி:
இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 90 ரூபாயையும் தொட்டுள்ளது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தாலும், தேர்தலுக்குப் பின் மீண்டும் விலை உயரும் அபாயம் உள்ளது.

ஆனால், மக்களின் அதிருப்தியையும் கோபத்தை சமாளிக்க, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக பாஜக தலைவர்கள் சிலர் செய்திகளை கசியவிட்டனர்.
அதற்கேற்பவே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  எரிபொருள் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அதன்பிறகு எந்த சத்தமும் இல்லை. ஆனாலும் பாஜக-வினர் வரி குறைப்புப் பற்றி பேசி வந்தனர்.இந்நிலையில், மத்திய அரசின் நிலைபாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார்.

“சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பிற்குள் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றைக் கொண்டு வருவது பற்றி எந்தவொரு அறிக்கையிலும் குறிப்பிடவில்லை” என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், “எரிபொருளை எப்போது ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை, மாநில அரசுகளும் இடம்பெற்ற ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்யும். நாட்டின் வருவாய் அளவீட்டையும் அதன் பாதிப்புகளையும் ஆய்வு செய்து சரியான தருணத்தில் எரிபொருளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் குறிப்பிட்டுஉள்ளார்.

கடந்த ஆண்டில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.19.98 இருந்தது. ஆனால், தற்போது லிட்டருக்கு ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த ஆண்டில் ரூ.15.83 ஆக இருந்தது. தற்போது லிட்டருக்கு ரூ.31.80 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;